Thursday, October 27, 2022

சேலம் செவித்திறன் குறையுடையோர் அரசு பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

27.10.2022
சேலம் மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலை பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இப்பணிக்கு 01.07.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. B.Ed கல்வித்தகுதியுடன் B.E. பட்டப்படிப்பு (கணினி அறிவியல்) அல்லது B.Sc. பட்டப்படிப்பு (கணினி அறிவியல்) அல்லது BCA பட்டப்படிப்பு அல்லது B.Sc.(தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம், சேலம் - 636005 என்ற முகவரியில் 10.11.2022 மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.




சீா்காழியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்



27.10.2022  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதந்தோறும் 4-ஆவது வெள்ளிக்கிழமை சீர்காழி கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் முகாம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், சீர்காழி கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன் பெறலாம். மேலும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், மார்பளவிலான புகைப்படம் 1, கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Tuesday, October 25, 2022

திருவாரூரில் அக்.27-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்



25.10.2022   திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அக். 27-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்படும்.

மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

யுடிஐடி அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றின் அசல், நகலுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா இருப்பின் தொகுப்பு வீடு கோருபவர்கள், நூறு நாள் அட்டை கோருபவர்கள், தனியார் துறையில் வேலைவாயப்பு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


Saturday, October 22, 2022

ரூ.20 லட்சம் செலவில் குழந்தையின் செவித்திறன் அறியும் அறைக்கு அனுமதி



21.10.2022  கம்பம்--பிறந்த குழந்தைகளின் காது கேட்கும் திறனை அறிய " சவுண்ட் புரூப்" அறை கட்ட அரசு ரூ. 20 லட்சம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கி உள்ளது -
மாவட்டத்தில் 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கம்பத்தில் மாதம் 230 பிரசவம் நடைபெறுகிறது. கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இருந்து கணிசமான பெண்கள் இங்கு பிரசவத்திற்காக வருகின்றனர். கம்பம் அரசு மருத்துவமனையின் குழந்தை பிறப்பு சதவீதத்தை வைத்து மத்திய அரசு மகப்பேறு கட்டடம் கட்ட ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் செவித்திறனை அறிய உதவும் "சவுண்ட் புரூப்" அறை அமைக்க அரசு ரூ.20 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.

பிறந்தவுடன் காது கேட்கும் திறனை சோதித்து, குறைபாடு இருந்தால் உடனே சரிசெய்ய இந்த அறை பயன்படும் என்று மருத்துவ அலுவலர் பொன்னரசன் கூறியுள்ளார்.




Friday, October 21, 2022

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவின் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு


22.10.2022
ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைப்பதற்கான நிதி வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி பெறாதவராக இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  பெரம்பலூர் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04328 225474 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


பொருத்துநர் தொழிற்பயிற்சி பிரிவில் சேர காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

 


21.10.2022 கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டிற்கான கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்றது. தற்போது, இங்கு மாணவர்கள் சேர்க்கை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மட்டும் தற்போது காலியாகவுள்ள 10 இடங்களுக்கு பொருத்துநர் தொழிற்பிரிவில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, October 19, 2022

எவ்வித தேர்வும் இல்லை... ரேசன் கடைகளில் 344 காலியிடங்கள்- எப்படி விண்ணப்பிப்பது?



சென்னை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் நேரடி நியமனம் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 344



கல்வித் தகுதிகள்:

விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி

கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை: http://www.drbchn.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்து, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் அல்லது சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தலாம்.

கடைசி தேதி: 14.11.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.



10ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரேசன் கடைகளில் 6,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:

மாவட்டம்பணியிடங்கள்ஆன்லைன் லிங்க்
1கோயம்புத்தூர்233https://www.drbcbe.in/
2விழுப்புரம்244https://www.drbvpm.in/
3விருதுநகர்164https://www.vnrdrb.net/
4புதுக்கோட்டை135https://www.drbpdk.in/
5நாமக்கல்200https://www.drbnamakkal.net/
6செங்கல்பட்டு178https://www.drbcgl.in/
7ஈரோடு243https://www.drberd.in/
8திருச்சி231https://www.drbtry.in/
9மதுரை164https://drbmadurai.net/
10ராணிப்பேட்டை118https://www.drbrpt.in/
11திருவண்ணாமலை376http://drbtvmalai.net/
12அரியலூர்75https://www.drbariyalur.net/
13தென்காசி83https://drbtsi.in/
14திருநெல்வேலி98https://www.drbtny.in/
15சேலம்276https://www.drbslm.in/
16கரூர்90https://drbkarur.net/
17தேனி85https://drbtheni.net/
18சிவகங்கை103https://www.drbsvg.net/
19தஞ்சாவூர்200http://www.drbtnj.in/
20ராமநாதபுரம்114http://www.drbramnad.net/
21பெரம்பலூர்58https://www.drbpblr.net/
22கன்னியாகுமரி134http://www.drbkka.in/
23திருவாரூர்182https://www.drbtvr.in/
24வேலூர்168http://drbvellore.net/
25மயிலாடுதுறை150https://www.drbmyt.in/
26கள்ளக்குறிச்சி116https://www.drbkak.in/
27திருப்பூர்240https://www.drbtiruppur.net/
28காஞ்சிபுரம்274https://www.drbkpm.in/
29கிருஷ்ணகிரி146https://drbkrishnagiri.net/
30சென்னை344https://www.drbchn.in/
31திருப்பத்தூர்75https://drbtpt.in/
32திண்டுக்கல்310https://www.drbdindigul.net/
33நாகப்பட்டினம்98https://www.drbngt.in/
34திருவள்ளூர்237https://www.drbtvl.in/
35தூத்துக்கடி141https://www.drbtut.in/
36நீலகிரி76https://www.drbngl.in/
37கடலூர்245https://www.drbcud.in/
38தர்மபுரி98https://www.drbdharmapuri.net/

அந்தந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).

விண்ணப்பதாரரின் கையெழுத்து - 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)

விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல்(pdf file)

குடும்ப அட்டை - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) (அல்லது)

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (pdf file)

SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண இரசீது செலுத்தியிருப்பின் அந்த இரசீது (pdf file)

(அல்லது)

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் (DRB Copy of the pay-in-slip) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் - 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) 10.

ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தமுறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னுரிமை கோரும் இனத்திற்கான/ இனங்களுக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள். மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

முன்னாள் இராணுவத்தினரைப் பொறுத்தவரை முதல் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தமுறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பல்கலை குழுக்களில் மாற்றுத் திறனாளிகள்



18.10.2022  சென்னை : அரசு பல்கலைகளில், காது கேளாத, வாய் பேச இயலாதவர் மற்றும் தொழு நோயாளிகளையும், 'சிண்டிகேட்' உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராக்கும் வகையில், சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நேற்று தாக்கல் செய்த மசோதா:

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு எதிராக உள்ள சட்டங்களை திருத்தம் செய்ய கோரியுள்ளார். இந்திய தொழுநோய் அறக்கட்டளையும், இந்த கோரிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளும், மற்றவர்களுடன் சமமான உரிமையை, கண்ணியமான வாழ்க்கையை, அவர்களின் நாணயத்திற்கான மதிப்பை பெறுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் யாரும், இயலாமையின் காரணத்தால், பாகுபடுத்தல்படக் கூடாது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர் மற்றும் தொழுநோயால் துன்புறும் நபர்கள், பல்கலைகளின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யவோ, நிர்ணயிக்கவோ, தமிழக பல்கலைகளின் சட்டம் வழிவகுக்கவில்லை.

எனவே, இந்த சட்டத்தை திருத்த, அரசு முடிவு செய்துள்ளது. இந்த திருத்தம், காது கேளாத, வாய் பேச இயலாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பல்கலை ஆட்சி குழு, ஆட்சி பேரவை மற்றும் செயலாட்சி மன்றத்தில் உறுப்பினராக வழி செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து அரசு பல்கலைகளில், தமிழக நிதித் துறை செயலர் ஒரு உறுப்பினராக இடம் பெறும் வகையில், பல்கலைகளின் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும், நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.-




Wednesday, October 12, 2022

தொழிற் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் வரவேற்பு

12.10.2022
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், காது கேளாதோர், வாய் பேசாதோர் பொருத்துநர் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2022ம் ஆண்டிற்கான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை மூன்று சுற்றுகளாக நடந்து முடிந்தது.

தற்போது அக்டோபர் 30ம் தேதி வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில், உளுந்துார்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மட்டும் தற்போது காலியாக உள்ள 10 இடங்கள் பொருத்துநர் (காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர்) தொழிற் பிரிவில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



இலவச லேப்டாப் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


12.10.2022
கல்வியாண்டில் 5,32,000 லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு இதுவரை லேப்டாப்கள் வழங்கப்படவில்லை.

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020 - 21ம் கல்வியாண்டில் 5,32,000 லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு இதுவரை லேப்டாப்கள் வழங்கப்படவில்லை என்வும் இவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளீ வைத்தனர்.




மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி


வேலூர் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலையில் போட்டி நடந்தது. இதில் மாற்றுத்திறன் கொண்ட 20 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




Tuesday, October 11, 2022

சமோசா சுவைத்தபடி மெரினா அழகை ரசிக்க… மாற்றுத் திறனாளிகள் நடத்தும் கஃபே!

22.09.2022
சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரால் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் கஃபே, அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும்.

இந்த கஃபே-வின் அறிமுகம், சென்னை மக்களிடையே புதிய அனுபவத்தை கொடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பும் வாழ்வாதாரமும் அளிக்கிறது.

கஃபே-வில் பணிபுரியும் ஊழியர்கள்

அருங்காட்சியகத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருக்கும் கஃபே-வில், பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமைக்கவும் பேக் செய்யவும் பயிற்சியளித்து வேலை வழங்குகின்றனர்.

இதைப்பற்றி கஃபே-வில் பணிபுரியும் ஊழியர் யுவராஜ் கூறியதாவது:

“இந்த கஃபே மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு வருகைத்தரும் வாடிக்கையாளர்களுக்காக பல வசதிகள் அமைத்துள்ளனர், குறிப்பாக சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான சாய்வு தளம், லிப்ட் போன்றவை இங்கு உள்ளது. மற்ற கஃபே-க்களில் இதுபோன்ற வசதிகள் காண்பது கடினமாகும்” என்று கூறுகிறார்.

இந்த கஃபே-வில் சமோசா முதல் சிக்கன் டிக்கா ரோல் வரை அனைத்து விதமான பேக்ட் உணவுகள் கிடைக்கின்றன.

மெரினா கடற்கரையை கஃபே பால்கனியில் இருந்து பார்த்தபடி இங்கு கிடைக்கும் உணவுகளை சுவைத்து மகிழும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் திறமையை கௌரவித்த மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





மயிலாடுதுறையில் அக்.13-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்



09.10.2022  மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதந்தோறும் 2-ஆவது

வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஆகிய துறைகளை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

அவ்வகையில், மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அக்.13-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகள் குறித்து மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

மேலும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை நகல், மார்பளவு புகைப்படம் 1, கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன்கள் பெற விண்ணப்பிக்கலாம்


11.10.2022  விருதுநகர் 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு பிரத்யே கமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்கள் வழங்கு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன்கள் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

 கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச் சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Friday, October 7, 2022

புதிதாக தொழிமுனைவோர் கவனத்திற்கு... ரூ.1.5 கோடி வரை அரசு மானியம்



நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு 32% ஆக உள்ளது. அதாவது, 3ல் 1 பங்கு உற்பத்தியை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் இந்த எண்ணிக்கை 15% ஆக உள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் இந்த வகை தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்த குறு நிறுவனங்கள் விழுக்காடு மட்டும் 99% ஆக உள்ளது. இந்த குறு நிருவனங்கள் தான் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து தந்து வருகின்றன. எனவே, இந்த வகை நிறுவனங்கள் தங்கு தடையின்று செயல்படவும், ஊக்கப்படுத்தவும் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதில், மிகவும் பிரபலமான முதலீட்டு மானியம் (Capital Subsidy) திட்டத்தைப் பற்றி இங்கு பாப்போம்.

உங்கள் முதலீட்டுக்கு மானியம்:

இந்த திட்டத்தின் கீழ் தகுதியான இயந்திரத் தளவாடங்களின் (Plant & Machinery Investment Total Cost) மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், மகளிர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வழங்கப்படுகிறது.

குறு நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 10 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் முறையே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உயர்வு பெறும் பட்சத்தில் (Additional Capital Subsidy for Scaling Up)அந்நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், மாசற்ற மற்றும் சுற்றுச்சூலில் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் பெண் தொழிமுனைவோர் குறு நிறுவனங்கள் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட 1.70 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, மகளிர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

யார் விண்ணப்பிக்கலாம்?

மாநிலத்தின் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள்

தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் அமைக்கப்படும் கீழ்கண்ட 24 சிறப்பு வகை சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்:


தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 254 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்

மாநிலத்தின் 388 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்

மேற்கண்ட வகைகளைச் சார்ந்த, தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்களுக்கு இட்த்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

யாரை அணுகுவது?

தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் (District Industries centre) செயல்பட்டு வருகின்றன. இதன் தலைமை அலுவலகம், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் செயற்பட்டு வருகிறது. மாவட்டத் தொழில் மையங்களைத் தொடர்பு கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.



அரியலூா் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள்



07.10.2022 அரியலூர் 
அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் 08.10.2022 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி அரியலூர் வட்டாரத்திற்கு ரெட்டிபாளையம், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு உல்லியக்குடி, செந்துறை வட்டாரத்திற்கு மருவத்தூர், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு சிலுவைச்சேரி ஆகிய 4 கிராமங்களில் நடக்கிறது.கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்."



ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: பயன்பெற ஆட்சியா் வேண்டுகோள்

 

06.10.2022 ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த முகாம் வரும் அக்.18 மற்றும் நவ.1-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் ஒன்றியங்களில் விவரம்: திமிரி ஒன்றியத்தில் வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்.14-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), வாலாஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் அக்.18-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை). (வெள்ளிக்கிழமை), சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அக்.28-ஆம் தேதியும் காவேரிப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்.21-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் நவ.1-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை), அரக்கோணம் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் நவ.4-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இந்த உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

26.09.2022
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 17.58 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவியை, கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில், இளநகரில் உள்ள, சிவபாக்கியம் மனவளர்ச்சி குன்றிய, 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இல்லத்துக்கு, காலாண்டு பராமரிப்பு மானியமாக, 2 லட்சத்து, 46 ஆயிரத்து, 269 ரூபாய்; இளநகர் சிவபாக்கியம், திருச்செங்கோடு ஆன்றாபட்டி ஏலீம், என்.புதுப்பட்டி கலர்புல் சில்ரன்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர் ஊதிய மானியமாக, தலா, 1.62 லட்சம் ரூபாய்;
மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்ல பராமரிப்பு மானியமாக, 2.64 லட்சம் ரூபாய்; நாமக்கல்-மோகனுார் சாலை, நீயூ லைப் காதுகேளாத சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய பராமரிப்பு மானியம், 92 ஆயிரத்து, 500 ரூபாய் பெறுவதற்கான ஆணையை, கலெக்டர் ஸ்ரேயா சிங்
வழங்கினார்.
இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டத்தில், ராசிபுரம், குமராபாளையம், ப.வேலுார், வரகூர், ஏமப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, காக்காவேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிதிஉதவி என, மொத்தம், 17 லட்சத்து, 58 ஆயிரத்து, 169 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சந்திரமோகன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



Thursday, October 6, 2022

ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை


மதுரை 
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதுபோல், ஆயிரக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து வித சிகிச்சைகளும் சிறப்பாக அளிப்பதால் நாளுக்குநாள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோத னைக்காக நவீன வசதிகளுடன் அறை திறக்கப்பட்டது. துறை தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த புதிய அறையை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் அருள் சுந்தரேஷ்குமார், ராதாகிருஷ்ணன், செவித்திறன் நிபுணர் கார்த்திகேயன், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 ரூ.20 லட்சம் மதிப்பு 
இதுகுறித்து துறை தலைவர் தினரகன் கூறுகையில், தென் மாவட்டத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டு உள்ளது. ஒரு அறையில் நோயாளிகள் அமரும் வகையிலும், மற்றொரு அறையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் வகையில் இரு அறைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் பரிசோதனை முடிவுகளை துல்லியமாக பெற முடியும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் சிறப்பான முறையில் செவித்திறன் பரிசோதனை செய்யலாம். இதுமட்டுமின்றி செவித்திறனின் பாதிப்பு எந்த நரம்புகளில் எந்த அளவுகளில் உள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் இந்த செவித்திறன் பரிசோதனை அறை அமைவது தென் மாவட்ட மக்களுக்கு வரபிரசாதம். இதன் மூலம் சென்னைக்கு நோயாளிகளை சிறப்பு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டாம். இங்கேயே அனைத்து வித பரிசோதனைகளையும் துல்லியமாக செய்ய முடியும். இதுபோல், செவித்திறன் குறித்த பி.எஸ்.சி. ஸ்பீச் அன்ட் லாங்குவேஞ் தெரபி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் இந்த அறை பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.