Wednesday, November 23, 2022

மாநிலக் கல்விக் கொள்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடம்: சைகை மொழி இணைப்பு மொழி ஆக்கப்படுமா ?



21.11.2022    மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே உன்னதமானதாக அறியப்படுவது மொழியாகும். நாம் கண்டுபிடித்துப் பயன்படுத்திவரும் மொழிகளே மனிதகுலத்தை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தியும் உயர்த்தியும் விளங்கச் செய்கின்றன. தொடக்க காலங்களில் உடலசைவுகள், ஒலிகள் மற்றும் குறியீடுகள் மூலமாகவே மனிதர்கள் அவர்களுக்குள் தொடர்புகொண்டார்கள். படிப்படியாக வளர்ச்சி பெற்ற மொழிகளால் நாம் இன்று அனைத்தையும்நயம்பட அழகாக வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்கும் மொழிகளே நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கருவியாகவும் உள்ளது வியப்பாக உள்ளது.

சைகை மொழி: பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் “சைகைமொழி”யும் உலகில் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. மற்ற மொழிகளைப் போலவே இதிலும் பல்வேறுவடிவங்களும் வகைகளும் உள்ளன.அவற்றுள் பன்னாட்டு சைகை மொழி,அமெரிக்க சைகை மொழி, தென்னாப்பிரிக்க சைகை மொழி, இந்திய சைகை மொழி உள்ளிட்ட இன்ன பிற நாட்டு சைகை மொழிகளும் அடங்கும்.

தேவைக்கேற்ப எந்த மொழிக்கும் சைகை மொழியை உருவாக்க முடியும். சைகை மொழி பயன்படுத்துவதால் மூளை செயல்பாடுகள் மேம்படவும் வாய்ப்புள்ளது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றைஉணர்ந்த தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சைகைமொழி பள்ளிக் கலைத் திட்டத்தில் அனைவருக்குமான ஒரு பாடமாகவேஇணைத்துக் கற்பிக்கப்படுகிறது.

உலக மக்கள்தொகையில் 20% மக்களுக்கு லேசான செவித்திறன் குறைபாடும், கிட்டத்தட்ட 5% மக்களுக்கு சற்று தீவிர செவித்திறன் குறைபாடும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகமக்கள் தொகையில் 18 சதவீதமும் 140 கோடி மக்கள் தொகை கொண்டஇந்தியாவில் 2.21% அதாவது மூன்றுகோடி மக்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களுள் பேச்சுமற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 26% உள்ளனர், அதில் 29% பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்.

உண்மையான உள்ளடக்கிய கல்வி: இவர்களில் பெரும்பாலோனோர் தற்போது பள்ளி/சிறப்புப் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு பெரும்பாலும் ஒற்றை மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது. தங்களுக்குள் எளிமையாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ளகூடுதலாக இவர்கள் சைகை மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். இதுபோல, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உலகளாவிய பிரெய்ல் மொழியும் உள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் 2009, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்2016, உள்ளடக்கிய கல்வித் திட்டம் போன்ற முன்னெடுப்புகளால் மாற்றுத்திறனாளிகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. உள்ளடக்கியக் கல்வியின் முக்கியநோக்கமே மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் பங்களிக்கக்கூடிய ஓர் அங்கமாக மாற்றுவதே ஆகும்.

நாம் அனைவருமே பல்வேறு சூழல்களில் தகவல் தொடர்பை எளிமையாக்க மற்றும் ஒலி மாசைக் குறைக்க உடல் மொழி மற்றும் சைகைகளைப் பயன்படுத்துவது நிதர்சனம். ஆகவே, இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கும் வண்ணம் நாம் சைகை மொழியை ‘இணைப்பு மொழி’யாக்கி பயன் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரக வளாகத்தில் ”சாத்தியங்களின் அருங்காட்சியகம்” (Museum of Possibilities) அமைத்து நாட்டிற்கே உதாரணமாக விளங்கும் தமிழகம் இதையும் முயன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்தவும், உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும். உள்ளடக்குதல் பிறருக்காக செய்யப்படும் முயற்சியாக இல்லாமல் பிறருடன் இணைந்து செய்யப்பட்டால் மட்டுமே அதன் இலக்கை அடைய முடியும்.






No comments:

Post a Comment