16.11.2022 சென்னை: தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர் மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிவது குறித்த முதல் உயர் மட்ட குழுக் கூட்டம் இன்று (நவ.16) தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட ம் 2016-ன்படி சம உரிமை, சம வாய்ப்பு கொள்கையினை அமல்படுத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு சாரா உறுப்பினர்கள் இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திட உகந்த பணியிடங்களை கண்டறிந்து, உரிய பயிற்சிகளை அளித்து, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கிடலாம் என்றும், நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தடைகளற்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தேவையான உதவி உபகரணங்களை வழங்கி, மாற்றுத்திறனாளிகளின் திறனைக் கண்டறிந்து, ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனியார் நிறுவனங்களுடன் தொடர் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் ஆலோசணை வழங்கினார்.
No comments:
Post a Comment