Thursday, November 17, 2022

'வேலை வேணும்'.. தமிழகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 67 லட்சம் பேர்.. வயது வாரியாக விவரம் சொன்ன அரசு!



17.11.2022
அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18,48,279 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 28,09,415 பேரும் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18,30,076 பேர் உள்ளனர் என்றும் 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2,30,310 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,602 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 73,366 பேரும், பெண்கள் 38,029 உள்பட 1,11,395 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ,100 பேரும், பெண்கள் 5,484 பேர் உள்பட 17,584 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9, 483 பேர், பெண்கள் 4,505 பேர் உள்பட 13,988 பேர் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3,41,615 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2, 55,496 நபர்கள் என மொத்தம் 67,23,682 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.




No comments:

Post a Comment