Saturday, December 10, 2022

ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு: மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி




சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்திஅறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த நவ.3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், “வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது அவர்கள் பெறும் ஓய்வூதியம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக வரும் ஜன.1 முதல் உயர்த்தி வழங்கப்படும்’’ என்றார்.

பல்வேறு அமைப்புகள்: அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, டிசம்பர்-3 இயக்க ஒருங்கிணைப்பாளர் டி.எம்.என்.தீபக்,தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பி.சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் பி. மனோகரன், தமிழ்நாடு உதவிக்கரம் - மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், இந்திய மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் ம.சகாதேவன், நேத்ரோதயா நிறுவனர் – அறங்காவலர் சி.கோவிந்தகிருஷ்ணன், தமிழ்நாடுமாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம், காது கேளாத மற்றும்பேச இயலாத மாற்றுத் திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன் தலைவர் மற்றும் நிறுவனர் சு.அப்துல் லத்தீப், சிவகங்கை மாவட்டம், தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கே.ஜே.டி.புஷ்பராஜ், தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் எம்.ஜி.ராகுல், தென்காசி மாவட்டம், அமர் சேவா சங்கத்தின் உறுப்பினர் என்.அழகப்பன், தமிழ்நாடு பார்வையற்றோர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்பூங்காவனம், காது கேளாதோருக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த ரமேஷ் பாபு மற்றும் மோகன், அனைத்து குறைபாடுகள் உள்ள பெண்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் பி.அருணாதேவி உள்ளிட்டோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.





கிராம உதவியாளர் பணியிடம்: மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீதம்



திருப்பூர்-'கிராம உதவியாளர் பணியிடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள, 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் முறையிட்டதை அடுத்து, இட ஒதுக்கீடு கிராம உதவியாளர் பணியிலும் பின்பற்றப்பட வேண்டுமென, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தர விட்டு உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், 'பார்வைத்திறன் குறைபாடு, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.


திருவாரூரில் டிச.18-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



11.12.2022 திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 18- ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை டிச.18- ஆம் தேதி காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடத்தவுள்ளது.

அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இம்முகாமில், 18 முதல் 35 வயது வரையுள்ள காதுகேளாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூகுள் லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொழிற்பயிற்சியில் சேரவும், கடனுதவி பெறவும் விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

திருமணம்: திருமணம் செய்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருவாரூர் லயன்ஸ் சங்கம் மூலம் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால், அவர்களும் இம்முகாமில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.


சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து



06.12.2022 கோவை 
கோவையில் உள்ள பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி மாணவ-மாணவிகள் அசத்தினர். 

மாற்றுத்திறனாளிகள் தினம் 
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு கல்வித்துறை ஏற்பாடு செய்து இருந்தது. அதன்படி உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம் என்ற தலைப்பில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக காதுகேளாதோர் பயன்படுத்தும் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்முறையாக உருவாக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி செய்தது. 

சைகை மொழி 
அதன்படி கோவை மாவட்டத்தில் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் இணைந்து அசோகபுரம் அரசு பள்ளியில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டத்தின்போது சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் கைகளை அசைத்தவாறு சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினர். தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த சிறார் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.





பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து.


07.12.2022 பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவர்கள் பாடினர்.

மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் நோக்கத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிரார்த்தனை கூட்டத்தில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட உத்தரவிடப்பட்டிருந்தது.

காது கேளாதோர் பயன்படுத்தும் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி வழிகாட்டுதலின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், அசோகபுரத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான வீடியோ பதிவு, கடந்த வாரம் மூன்று நாட்கள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை குழந்தை ஏசு காதுகேளாதோர் பள்ளி, கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் காதுகேளாத குழந்தைகளும் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சக மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு, சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர்.

பாடலின் வீடியோ பதிவை, கடந்த 3ம் தேதி பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் சென்னையில் வெளியிட்டார். இப்பாடல் வைரலாக பரவியது. ஏறத்தாழ, 12 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலை பார்வையிட்டனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதில், மாற்றுத்திறன் குழந்தைகளுடன் சக மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.



Friday, December 2, 2022

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை.



01.12.2022 கள்ளக்குறிச்சி 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1,000 ரூபாயும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 3,000 ரூபாயும், 9 முதல் பிளஸ் 2 வரை 4,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 6,000, முதுகலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 7,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவி யர் கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, அடையாள அட்டை ஆதார் அட்டை, உரிய கல்விச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கி அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


01.12.2022 சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோமாக என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் " அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமான இந்த நாள் அமைந்துள்ளது.

இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தியும், அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றியும் விவரங்களைக் காட்சிப்படுத்தியும், இந்த நாள் மாநிலம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்நாளில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோமாக. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.