26.11.2019
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.சிம்மச்சந்திரன். இவர், மாற்றுத்திறனாளிகள் சார்பில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மாநில ஒருங்கிணைப்பு குழு நல வாரியம், போக்குவரத்து துறை ஆலோசனை குழு மற்றும் தெற்கு ரயில்வே சென்னை மண்டல ஆலோசனை குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.மேலும், திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர். மாற்றுத்திறனாளிகள் குறித்த இவரது பார்வையை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து... மாற்றுத்திறனாளிகள் குறித்து? கை, கால், கண், காது, மனவளர்ச்சி, உயரம் குறைந்தோர் என, ஒன்பது வகையாக மாற்றுத் திறனாளிகள் அடையாளம் காணப்பட்டனர். தற்போது, நரம்பு, தோலின் நிறம் மாறுதல் உள்ளிட்டோர் என, 21 வகையாக அடையாளம் காணப்படுகின்றனர். இதில், சில பாதிப்புகளுக்கு, மருத்துவ சான்று வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன.மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அரசு திட்டங்கள்?மாற்றுத்திறனாளிகளுக்கு, 85 வகையான அரசு திட்டங்கள் உள்ளன.
பல திட்டங்கள், பயனாளிகளிடம் சேர்வதில் தடங்கல்கள் உள்ளன. ஆவின் கடை நடத்த, 50 ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது. பூத் வடிவ கடை இலவசமாக வழங்க, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனால், கடை நடத்த இடம் கிடைப்பதில்லை. நடைபாதையில் கடை நடத்தக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவன வளாகங்களில், கடை நடத்த அனுமதிக்க வேண்டும்.வேறு என்ன சிரமம்? உதவித்தொகை, 1,000 ரூபாயை, வீடுகளில் சென்று வழங்க முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் கூறும் இடத்திற்கு, மாற்றுத்திறனாளிகளை வரவழைத்து அலைக்கழிக்கின்றனர்.
இதற்கு, ஆட்டோ செலவு ஆகிறது. சில முகவர்கள், 50 - 100 ரூபாய் பிடித்தம் செய்கின்றனர். இது ஒரு உதாரணம். பல திட்டங்களில், இதுபோன்ற பிரச்னைகள், வெவ்வேறு வடிவில் உள்ளன.அரசு துறைகளில் வேலைவாய்ப்பு?பார்வையற்றோர், கலெக்டர் ஆன நிலையில், 'தகுதியில்லை' என, சில அரசு துறைகள், வேலை வழங்குவதில்லை. சில மாநிலங்களில், காவல் துறை அலுவலக பணிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளை நியமிக்கின்றனர். தமிழகத்தில், சாதாரண காவலர்களை நியமிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், இடஒதுக்கீடு பயனற்று போகிறது.பொது இடங்களில் உள்ள வசதிகள்?பொது இடங்களில், பிறர் உதவியை நாடாமல், தனக்கு தேவையானதை, தானே நிறைவேற்றி கொள்ளும் திறமையை, பல மாற்றுத்திறனாளிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள மாற்றுத்திறனாளிகள், பஸ், ரயிலில், தனியாக பயணிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒதுக்கீடு இருக்கை பெறுவதில் கூட, தகராறு செய்ய வேண்டி உள்ளது. பல ஏ.டி.எம்.,கள் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன.சொந்த வாகனம் வைத்திருப்போருக்கு உரிமம் பெற முடிகிறதா?மூன்று சக்கர வாகனத்திற்கு, தகுதி சான்று அடிப்படையில், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.
காதுகேட்காதவர், வாகனம் ஓட்ட தகுதி இருந்தும், உரிமம் வழங்க சட்டம் அனுமதிப்பதில்லை. இதுபோன்று, தனித்தன்மையுடன் வாழும் பல மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி, உரிமம் மறுப்பு குறித்து, அதிகாரிகள் கூறும் காரணங்களும் நியாயமாகவே தெரிகிறது.கீதாபவனுடன் நடத்தும் 'சுயம்வரம்' திட்டம் குறித்து?படிப்பு, நல்ல பணி, ஊதியம், நல்ல குணம், சொத்து இருந்தும், பல மாற்றுத்திறனாளிகளுக்கு, வரன் கிடைப்பதில்லை.
உறவுகள் கூட, திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதை கருத்தில் வைத்து, 2009ல், இத்திட்டத்தை துவங்கினோம். மாவட்டம் தோறும், இலவச சுயம்வரம் நடத்துகிறோம். சமூக நலத்துறை வாயிலாக, ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் இருபாலர் மற்றும் விதவை, விவாகரத்தானோர், ஆதரவற்றோரை வரவழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறோம்.எப்படி தேர்வு செய்கிறீர்கள்?வயது, இருப்பிடம், விதவை, ஆதரவற்றோர், முதல் திருமணம், விவாகரத்து சான்றுகளுடன் விண் ணப்பிக்க வேண்டும்.
திருமண மோசடி செய்வதை தடுக்க, ஆறு மருத்துவர்கள், ஆறு வழக்கறிஞர்களால், மருத்துவ கவுன்சிலிங், சட்ட ஆலோசனை நடத்துகிறோம். தேர்வாகும் நபர்களுக்கு, ஆறு வகை ரத்த பரிசோதனை செய்கிறோம். அதன்பின் தான் மணமக்களை இறுதி செய்வோம்.திருமண ஏற்பாடு குறித்து?மொத்தம், 52 வகையான சீர்வரிசை, அரை கிராம் தங்க தாலி, பட்டு துணிகள், 2 மாத மளிகை பொருட்கள், திருமண பதிவு, வாகன வசதிகள் என, அனைத்தும் இலவசம். அரசு வழங்கும் திருமண உதவித்தொகையை பெற்றுக் கொடுக்கிறோம்.அவர்களின் பொருளாதாரம் குறித்து?
சுயம்வரம் தேடும் மாற்றுத்திறனாளிகளில், 90 சதவீதம் பேர், குடும்ப ஆதரவில் உள்ளதால், அவர்களுக்கு பொருளாதார பிரச்னை இல்லை. தனியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு, தயாராக உள்ளனர்.எந்த சூழலில், மக்கள் சுயம்வரத்திற்கு வருகின்றனர்?சாதாரண மக்களில், ஏழை, நடுத்தரம் தான் அதிகம். மாற்றுத்திறனாளிகள், சாதாரண மக்களை விரும்புகின்றனர். சாதாரண மக்கள், கை, கால், காது கேளாத மாற்றுத்திறனாளிகளை தான் விரும்புகின்றனர். பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எவ்வளவு வசதியாக இருந்தாலும், அவர்களை திருமணம் செய்ய முன் வருவதில்லை.
பார்வையற்றோருக்குள் தான், பெரும்பாலும் திருமணம் நடக்கிறது.இதுவரை நடத்திய திருமணங்கள்?ஒவ்வொரு சுயம்வரத்திலும், 6,000 பேர் பங்கேற்கின்றனர். இதில், 50 - 60 பேர் தேர்வாகின்றனர். 10 ஆண்டில், 716 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளோம். திரைப்படங்களில், மாற்று திறனாளிகளை கேலி செய்வது குறைந்துள்ளதா?விழிப்புணர்வு, தணிக்கை குழு தலையீடால், திரைப்படங்களில், மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வது குறைந்துள்ளது; அதே நேரம் சின்னத் திரையில் அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்ய மறுப்பதற்கு, சின்னத்திரையில் வரும் கேலி வசனங்களும் ஒரு காரணம். இதை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment