Thursday, November 28, 2019

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது அதிகரிப்பு!

26.11.2019
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.சிம்மச்சந்திரன். இவர், மாற்றுத்திறனாளிகள் சார்பில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மாநில ஒருங்கிணைப்பு குழு நல வாரியம், போக்குவரத்து துறை ஆலோசனை குழு மற்றும் தெற்கு ரயில்வே சென்னை மண்டல ஆலோசனை குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
மேலும், திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர். மாற்றுத்திறனாளிகள் குறித்த இவரது பார்வையை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து... மாற்றுத்திறனாளிகள் குறித்து? கை, கால், கண், காது, மனவளர்ச்சி, உயரம் குறைந்தோர் என, ஒன்பது வகையாக மாற்றுத் திறனாளிகள் அடையாளம் காணப்பட்டனர். தற்போது, நரம்பு, தோலின் நிறம் மாறுதல் உள்ளிட்டோர் என, 21 வகையாக அடையாளம் காணப்படுகின்றனர். இதில், சில பாதிப்புகளுக்கு, மருத்துவ சான்று வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன.மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அரசு திட்டங்கள்?மாற்றுத்திறனாளிகளுக்கு, 85 வகையான அரசு திட்டங்கள் உள்ளன.

பல திட்டங்கள், பயனாளிகளிடம் சேர்வதில் தடங்கல்கள் உள்ளன. ஆவின் கடை நடத்த, 50 ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது. பூத் வடிவ கடை இலவசமாக வழங்க, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனால், கடை நடத்த இடம் கிடைப்பதில்லை. நடைபாதையில் கடை நடத்தக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவன வளாகங்களில், கடை நடத்த அனுமதிக்க வேண்டும்.வேறு என்ன சிரமம்? உதவித்தொகை, 1,000 ரூபாயை, வீடுகளில் சென்று வழங்க முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் கூறும் இடத்திற்கு, மாற்றுத்திறனாளிகளை வரவழைத்து அலைக்கழிக்கின்றனர்.

இதற்கு, ஆட்டோ செலவு ஆகிறது. சில முகவர்கள், 50 - 100 ரூபாய் பிடித்தம் செய்கின்றனர். இது ஒரு உதாரணம். பல திட்டங்களில், இதுபோன்ற பிரச்னைகள், வெவ்வேறு வடிவில் உள்ளன.அரசு துறைகளில் வேலைவாய்ப்பு?பார்வையற்றோர், கலெக்டர் ஆன நிலையில், 'தகுதியில்லை' என, சில அரசு துறைகள், வேலை வழங்குவதில்லை. சில மாநிலங்களில், காவல் துறை அலுவலக பணிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளை நியமிக்கின்றனர். தமிழகத்தில், சாதாரண காவலர்களை நியமிக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள், இடஒதுக்கீடு பயனற்று போகிறது.பொது இடங்களில் உள்ள வசதிகள்?பொது இடங்களில், பிறர் உதவியை நாடாமல், தனக்கு தேவையானதை, தானே நிறைவேற்றி கொள்ளும் திறமையை, பல மாற்றுத்திறனாளிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள மாற்றுத்திறனாளிகள், பஸ், ரயிலில், தனியாக பயணிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒதுக்கீடு இருக்கை பெறுவதில் கூட, தகராறு செய்ய வேண்டி உள்ளது. பல ஏ.டி.எம்.,கள் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளன.சொந்த வாகனம் வைத்திருப்போருக்கு உரிமம் பெற முடிகிறதா?மூன்று சக்கர வாகனத்திற்கு, தகுதி சான்று அடிப்படையில், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.

காதுகேட்காதவர், வாகனம் ஓட்ட தகுதி இருந்தும், உரிமம் வழங்க சட்டம் அனுமதிப்பதில்லை. இதுபோன்று, தனித்தன்மையுடன் வாழும் பல மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி, உரிமம் மறுப்பு குறித்து, அதிகாரிகள் கூறும் காரணங்களும் நியாயமாகவே தெரிகிறது.கீதாபவனுடன் நடத்தும் 'சுயம்வரம்' திட்டம் குறித்து?படிப்பு, நல்ல பணி, ஊதியம், நல்ல குணம், சொத்து இருந்தும், பல மாற்றுத்திறனாளிகளுக்கு, வரன் கிடைப்பதில்லை.

உறவுகள் கூட, திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதை கருத்தில் வைத்து, 2009ல், இத்திட்டத்தை துவங்கினோம். மாவட்டம் தோறும், இலவச சுயம்வரம் நடத்துகிறோம். சமூக நலத்துறை வாயிலாக, ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் இருபாலர் மற்றும் விதவை, விவாகரத்தானோர், ஆதரவற்றோரை வரவழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறோம்.எப்படி தேர்வு செய்கிறீர்கள்?வயது, இருப்பிடம், விதவை, ஆதரவற்றோர், முதல் திருமணம், விவாகரத்து சான்றுகளுடன் விண் ணப்பிக்க வேண்டும்.

திருமண மோசடி செய்வதை தடுக்க, ஆறு மருத்துவர்கள், ஆறு வழக்கறிஞர்களால், மருத்துவ கவுன்சிலிங், சட்ட ஆலோசனை நடத்துகிறோம். தேர்வாகும் நபர்களுக்கு, ஆறு வகை ரத்த பரிசோதனை செய்கிறோம். அதன்பின் தான் மணமக்களை இறுதி செய்வோம்.திருமண ஏற்பாடு குறித்து?மொத்தம், 52 வகையான சீர்வரிசை, அரை கிராம் தங்க தாலி, பட்டு துணிகள், 2 மாத மளிகை பொருட்கள், திருமண பதிவு, வாகன வசதிகள் என, அனைத்தும் இலவசம். அரசு வழங்கும் திருமண உதவித்தொகையை பெற்றுக் கொடுக்கிறோம்.அவர்களின் பொருளாதாரம் குறித்து?

சுயம்வரம் தேடும் மாற்றுத்திறனாளிகளில், 90 சதவீதம் பேர், குடும்ப ஆதரவில் உள்ளதால், அவர்களுக்கு பொருளாதார பிரச்னை இல்லை. தனியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு, தயாராக உள்ளனர்.எந்த சூழலில், மக்கள் சுயம்வரத்திற்கு வருகின்றனர்?சாதாரண மக்களில், ஏழை, நடுத்தரம் தான் அதிகம். மாற்றுத்திறனாளிகள், சாதாரண மக்களை விரும்புகின்றனர். சாதாரண மக்கள், கை, கால், காது கேளாத மாற்றுத்திறனாளிகளை தான் விரும்புகின்றனர். பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எவ்வளவு வசதியாக இருந்தாலும், அவர்களை திருமணம் செய்ய முன் வருவதில்லை.

பார்வையற்றோருக்குள் தான், பெரும்பாலும் திருமணம் நடக்கிறது.இதுவரை நடத்திய திருமணங்கள்?ஒவ்வொரு சுயம்வரத்திலும், 6,000 பேர் பங்கேற்கின்றனர். இதில், 50 - 60 பேர் தேர்வாகின்றனர். 10 ஆண்டில், 716 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளோம். திரைப்படங்களில், மாற்று திறனாளிகளை கேலி செய்வது குறைந்துள்ளதா?விழிப்புணர்வு, தணிக்கை குழு தலையீடால், திரைப்படங்களில், மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வது குறைந்துள்ளது; அதே நேரம் சின்னத் திரையில் அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்ய மறுப்பதற்கு, சின்னத்திரையில் வரும் கேலி வசனங்களும் ஒரு காரணம். இதை தவிர்க்க வேண்டும்.

Sunday, November 24, 2019

ஐந்து சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.1.8 லட்சத்தில், 'ஐ -- பேட்'

12.11.2019
அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் பயிலும், சிறப்பு பள்ளிகளுக்கு, 'ஆவாஸ்' மொன்பொருள் அடங்கிய, 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து 'ஐ - பேட்'டை, சென்னை கலெக்டர் வழங்கினார்.

'ஆவாஸ்' என்ற மென்பொருள் காதுகேளாதோர், வாய் பேச முடியாதோருக்கு உதவக்கூடியது. இதை பயன்படுத்தி, 'ஆட்டிசம்' உள்ளிட்ட அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள், பேச நினைக்கும்கருத்தை எளிதாகப் பரிமாறிக் கொள்ளலாம்.சென்னை மாவட்டம் மற்றும் நலத்துறை சார்பில், அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் பயிலும், ஐந்து சிறப்பு பள்ளிகளுக்கு, 1.8 லட்சம்ரூபாய் மதிப்பிலான, 'ஆவாஸ்' மென்பொருள் அடங்கிய, ஐந்து ஐ - பேடை, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி நேற்று வழங்கினார்.இதுவரை, 30 சிறப்பு பள்ளிகளுக்கு, 11.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஆவாஸ்' மென்பொருள் அடங்கிய, 30 ஐ - பேட் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சைகை மொழி பயிற்சி மாணவர்கள் பங்கேற்பு!!

20.11.2019
திவ்யாங் டெவலப்மென்ட் சொசைட்டி (டிடிஎஸ்) என்ற அமைப்பு காது கேளாதோருக்கான சர்வதேச அளவில் தனித்துவமான சைகை மொழியை உருவாக்கியது.

சர்வதேச சைகை மொழிக்கான பாடத்தை கற்பிக்கும், பயிற்சி வகுப்புகள் சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கம் சார்பாக சிங்கப்பூரில் நடந்தது.

இதில், இந்தியாவை சேர்ந்த 13 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு சர்வதேச அளவிலான சைகை மொழியை கற்றுக் கொண்டனர்.

25-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா கடந்த 8ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி வரை கொல்கத்தாவில் நடந்தது.

இதற்கிடையில், சர்வதேச குழந்தைகள் தினம் 14-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழாவை கொண்டாடும் விதமாக, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுக்காக பல அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள்.

காது கேளாத வாய் பேச முடியாத சிறுவன் மீது தாக்குதல்? பள்ளி விடுதி மீது குற்றச்சாட்டு…!!

24.11.2019
கோவை : பொள்ளாச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், திருவள்ளுவர் காலனி பகுதியில் வசிப்பவர் ராஜன். இவருடைய மனைவி கலாமணி. விவசாயக் கூலி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் வினு பிரபு (வயது 16), இவன் பத்தாம் வகுப்பு அவிநாசி பகுதியில் உள்ள தெக்கலூர் காது கேளாதோர் பள்ளியில் படித்து வருகிறான். விடுதியில் தங்கி உள்ளான்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு செல்போன் மூலமாக அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் வினுபிரபு வயிற்று வலி காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தனர்.

அதனடிப்படையில் தாயும், தந்தையும் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகனைப் பார்த்தனர். அப்பொழுது கழுத்து நெறிக்கப்பட்டு தற்கான, தற்கொலை முயற்சி செய்து கொண்டதற்கான தடம் இருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் தனது மகனை விடுதியில் உள்ளவர்கள் அடித்து துன்பப்படுத்தி உள்ளனர். என் மகனுக்கு வயிற்று வலி எதுவும் கிடையாது என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆதலால் ஹாஸ்டலில் என் மகனை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுது புலம்பினர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றன. இந்த சம்பவம் சற்றுமுன் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Saturday, November 23, 2019

வேலைவாய்ப்பு பதிவு: 67 லட்சத்தை எட்டியது

23.11.2019
சென்னை, நவ.23 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை எட்டியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன் விவரம்: அக்டோபர் 31-ஆம் தேதியன்று நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 ஆகும். இவர்களில், 18 வயதுக்குட்பட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேராகவும், கல்லூரி மாணவர்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867 பேராகவும், 35 வயது வரையுள்ளவர்கள் 25 லட்சத்து 47 ரத்து 802 பேரும், 57 வயது வரையுள்ளவர்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 பேர் உள்ளனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப் போரில் மாற்றுத் திறனாளி பதிவாளர்களும் உள்ளனர். அவர்கள், கை, கால் குறைபாடு உடையவர்கள், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோரும் அடங்குவர். அவர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் இருப்பதாக அந்த அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, October 15, 2019

பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.


15.10.2019, காஞ்சிபுரம்:பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

சென்னை, போரூர், ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பேச்சு, மொழி, கேட்பியல் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, காஞ்சிபுரம், சதாவரத்தில் உள்ள அரசு காது கேளாதோர் பள்ளியில், மருத்துவ முகாம் நடத்துகின்றன.வரும், 15ல், காலை, 9:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இம்முகாம் நடைபெறுகிறது.இதில், 10 வயதிற்கு உட்பட்ட செவித்திறன், ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு, உதடு பாதிப்பு, மூளை முடக்கு வாதத்தினால் திக்குவாய், உச்சரிப்பு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.பங்கேற்க, முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, 99447 98555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Saturday, October 12, 2019

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான விளையாட்டு போட்டி


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தடகளம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, தூத்துக்குடி, சேலம், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

மனிதனின் முதல் மொழி

குட்டீஸ், நாம் வாயால் பேசுகிறோம், விரல்களால் எழுதுகிறோம். ஆனால் வாயை மூடி விரல்களால் பேச முடியும் என்பதை அறிவீர்களா? சொல்லப்போனால் விரல்களால் பேசியதுதான் (சைகை மொழி) மனிதனின் முதல் மொழி என்பது உங்களுக்குத் தெரியுமா? மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான சைகை மொழி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

* உலகில் பல ஆயிரம் மொழிகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் குறைவான மொழிகளே உலகில் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. ஏராளமான மொழிகள் எழுத்துகள் இல்லாமலும், அதிகமாகப் பேசப்படாமலும் அழிந்து வருகின்றன. உலகில் பழமையான மொழி எது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களால் தெளிவான முடிவு எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளைவிட மூத்த மொழி மனிதனின் சைகை மொழியே. சைகையால் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துகள் தோன்றின. அதன் பின்னரே மொழிகள் வளர்ந்தன. ஆக சைகை மொழியே மனிதனின் முதல் மொழி.

* இன்றும் நமக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும், அந்த மொழிகளை அறியாத ஊருக்குச் சென்றால் நாம் சைகை மொழியில்தான் பேச வேண்டும். சைகை மொழி நமக்குள் மறைந்து கிடக்கிறது. நமது பேச்சு மற்றவர் களுக்கு புரியாவிட்டாலோ அல்லது அவர்கள் பேசுவது நமக்கு புரியவில்லை என்றாலோ நம்மை அறியாமலே நமது கைகள் சைகை மொழியை பயன்படுத்த ஆரம்பித்துவிடும். உலக அளவில் பொதுவான சைகை குறியீடுகள் உள்ளன. உணவு, நீர், வழிகேட்டல் போன்ற அடிப்படைகளுக்கான சைகை குறியீடுகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. பெரும்பாலான சைகை மொழியில் ஒத்துப்போகின்றன.

* உலக காது கேளாதோர் அமைப்பு சுமார் 7 கோடி மக்கள் காது கேளாத தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது. அவர்கள் சைகை மொழியில்தான் தகவல் தொடர்பு செய்கிறார்கள். அவர்கள் சைகையால்தான் பெரும் பாலான உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு இருக்கும். சைகை மொழிக்கும் வரலாறும், சுவையான பின்னணியும் உண்டு.

* சைகை மொழியும் ஒவ்வொரு நாட்டிற்கும் சிறிது வேறுபாடு காணப் படுகிறது. எனவே சைகை மொழியும் பல வகைப்படுகிறது.

* சைகை மொழி என்பது வெறும் கைகளால் பேசப்படுவதல்ல. முக பாவனை, கை அசைவு, உடல் அசைவு, வடிவ பாவனை ஆகியவற்றின் மூலம் முழுமையான சைகை மொழி பேசப்படுகிறது. சைகை மொழிக்கும் இலக்கணம் உண்டு. சரியான சைகையும், இமை-உடல் அசைவுமே கேள்வி பதிலை புரிய வைக்கின்றன.

* சைகை மொழியில் புருவ அசைவு முக்கியத்துவமானது. யார்? என்ன? எங்கே, ஏன்? என்பது போன்ற கேள்வி களுக்கு புருவம் கீழ்நோக்கி இறக் கப்பட வேண்டும். ஆம் அல்லது இல்லை என்பதை தெரிவிக்கும் சூழலில் புருவம் மேல்நோக்கி செல்ல வேண்டும்.

* மூளையில் பாதிப்பு ஏற்பட்டவர்களாலும் சைகை மொழியை புரிந்து கொள்ளவும், சைகை மொழியில் பேசவும் முடியும். ஆனால் அவர்கள் சைகை மொழிக்கான இலக்கணத் தன்மையுடன் பேச மாட்டார்கள்.

* அமெரிக்க சைகை மொழியில் ஆங்கில எழுத்துகள் ஒரு கையினால் காண்பிக்கப்படுகிறது. ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து சைகை மொழிகளில் இரு கைகளால் ஆங்கில எழுத்துகள் உணர்த்தப்படுகின்றன.

* பெண் மற்றும் பெண் தொடர்பான சைகைகள் தாடையின் அருகில் கைகளைக் கொண்டு செய்து காண்பிக்கப்படுகின்றன. ஆண் தொடர்பான சைகைளை குறிக்க நெற்றியின் அருகே கைகளைக் கொண்டு சைகை செய்யப்படுகிறது.

* காது கேளாதவர்கள் யாரிடமாவது உங்கள் பெயரை தெரிவிக்க வேண்டுமென்றால் ஆங்கில எழுத்துகளின் வடிவத்தை உங்கள் கைகளால் குவித்து ஒவ்வொரு எழுத்தாக செய்து காண்பித்தால் புரிந்து கொள்வார்கள். நீங்கள் அவர்களது பெயரை கேட்டாலும் அப்படியே சைகையால் எழுதிக் காண்பிப்பார்கள்.

* சைகை மொழியில் ஒவ்வொரு சைகைக்கும் 5 கூறுகள் உண்டு. அவற்றை மாற்றிக் காண்பித்தால் முழு அர்த்தமும் மாறிவிடும்.

* உள்ளங்கையின் உதவியால் திசைகளை கூறுவார்கள்.

* ஒரே சைகையை இரு அசைவுகளாக காண்பிப்பது இரு வேறு அர்த்தங்களை குறிக்கும்.

* அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சைகை மொழியை பயன்படுத்துகிறார்கள்.

* இன்று சைகை மொழியை உணர்த்துவதற்காக பல்வேறு அப்ளிகேசன்கள் உள்ளன. வாய்பேச முடியாதவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக சைகை மொழியை மற்றவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லவும் அப்ளிகேசன்களும், கருவிகளும் உள்ளன. அவற்றின் உதவியால் பேச முடிந்தவர்கள், பேச முடியாதவர்களுடன் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

* உங்களுக்கென பிரத்தியேக சைகை குறியீடுகளை உருவாக்கி உங்களுக்குப் பிரியமானவர்களுடன் சங்கேத பாஷையில் பேச முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. உங்கள் தேவைக்கேற்ப எளிதான சைகை குறியீட்டு மொழியை உருவாக்கலாம்.