Sunday, August 13, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கு 16ல் வேலைவாய்ப்பு முகாம்

10.08.2023
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார்செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காவியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகாமில் 10ம் வகுப்பு பிளஸ் 2 ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறப்பில் கூறப்பட்டுள்ளது.




மகளிருக்கு மாதாமாதம் ரூ. 1000... இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு!


Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்க கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ தலைமை தாங்கினார். கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ முகாம்கள்‌ இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

முதற்கட்ட முகாம்‌ ஜுலை 24ஆம்‌ தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 4ஆம்‌ தேதி வரை நடைபெற்றது. இரண்டாம்‌ கட்ட முகாம்கள்‌ ஆகஸ்ட்‌ 5 ஆம்‌ தேதி முதல்‌ 14ஆம்‌ தேதி வரை நடைபெறும்‌. இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில்‌ விண்ணப்பம்‌ பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச்‌ சிறப்பு முகாம்களும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்‌ விண்ணப்பப்‌ பதிவு முன்னேற்றம்‌ குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்‌.

குறிப்பாக, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ விண்ணப்பிப்பதற்கு தகுதிகள்‌ மற்றும்‌ தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்‌ கடுமையாக உடல்‌ பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையால்‌, பராமரிப்பு உதவித்‌ தொகை வழங்கப்படும்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ குடும்பங்கள்‌ விண்ணப்பிக்கத்‌ தகுதியானவர்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்‌ துறையின்‌ கீழ்‌ சமூகப்‌ பாதுகாப்பு திட்டத்தில்‌ ஒய்வூதியம்‌ பெறும்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ குடும்பங்களுக்கும்‌, இந்தத்‌ திட்டத்தில்‌ விதிவிலக்கு அளிக்க வேண்டும்‌ என்று முதலமைச்சரிடம்‌ கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து‌ பரிசீலித்த முதலமைச்சர்‌, வருவாய்த்‌ துறையின்‌ கீழ்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌
மாற்றுத்திறனாளிகள்‌ தவிர, அக்குடும்பத்தில்‌ உள்ள தகுதிவாய்ந்த பெண்களும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பயன்பெறும்‌ வகையில்‌ விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார்‌.

ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது

கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர்‌ ஒய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, இந்திரா காந்தி விதவையர்‌ ஓய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, ஆதரவற்ற விதவைகள்‌ ஓய்வூதியத்‌ திட்டம்‌, ஆதரவற்ற மற்றும்‌ கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத்‌ திட்டம்‌, 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்‌ பெண்களுக்கான ஓய்வூதியத்‌ திட்டம்‌, இலங்கை அகதிகளுக்கான (முதியோர்‌, ஆதரவற்ற விதவைகள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌) ஓய்வூதியத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்பு முதியோர்‌ ஓய்வூதியத்‌ திட்டம்‌ உள்ளிட்ட சமூகப்‌ பாதுகாப்பு திட்டங்களின்‌ ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய்‌ 1200 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது.

ஒரு குடும்பத்தில்‌ யாரேனும்‌ ஒரு நபர்‌, சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களிலும்‌, அமைப்புசாராத்‌ தொழிலாளர்‌ நல வாரியத்திலும்‌ முதியோர்‌ ஒய்வூதியம்‌ பெற்று வந்ததால்‌, அக்குடும்பத்தில்‌ உள்ள பெண்கள்‌ கலைஞர்‌
மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்டது.

இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்

முதியோரின்‌ கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர்‌ ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப்‌ பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின்‌ கடமை மட்டுமல்ல, சமூகத்தின்‌ கடமை என்றும்‌ அரசு கருதுகிறது. அதேவேளையில்‌ அரசு வழங்கும்‌ முதியோர்‌ ஓய்வூதியத்தால்‌, அந்தக்‌ குடும்பத்தில்‌ உள்ள தகுதியான பெண்கள்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பலன்‌ பெறுவது தடைபடக்கூடாது என்று முதலமைச்சர்‌ ஆணையிட்டுள்ளார்‌.

எனவே, இந்திரா காந்தி முதியோர்‌ ஓய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ மற்றும்‌ அமைப்புசாராத்‌ தொழிலாளர்‌ நல வாரியம்‌ ஆகிய திட்டங்களில்‌ முதியோர்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடும்பங்களில்‌ உள்ள ஓய்வூதியதாரர்‌ அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று முதலமைச்சர் ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்‌.

சிறப்பு முகாம்கள்

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின்‌ குடும்பத்‌ தலைவிகள்‌, முதியோர்‌ ஓய்வூதியத்‌ திட்டங்களில்‌ ஒய்வூதியம்‌ பெறும்‌ குடும்பங்களில்‌ உள்ள தகுதிவாய்ந்த மகளிர்‌ மற்றும்‌ ஏற்கெனவே முகாம்களில்‌ பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில்‌ வருகை புரிய இயலாத குடும்பத்‌ தலைவிகள்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய, ஆகஸ்ட்‌ 18,19,20 ஆகிய மூன்று நாட்கள்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வகை குடும்பங்களில்‌ உள்ள பெண்கள்‌ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால்‌, மீண்டும்‌ விண்ணப்பிக்கத்‌ தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள்‌ அனைவரும்‌ இந்த வாய்ப்பினைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Friday, August 11, 2023

புதுகை மக்கள் குறைகேட்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ.63,500 மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள, மேக்னிபயர் என்ற கருவிகளும், செவித் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.13,500 மதிப்புள்ள திறன்பேசியையும் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 412 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு. செய்யது முகமது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



Friday, July 28, 2023

கடலூரில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை



 கடலூரில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை இ.ஏஞ்சலின் வசந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூரில் செயல்படும் செவித்திறன் பாதிப்புடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கு, 5 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உடை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9442526871, 6380305723 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 26, 2023

செவித்திறன் பரிசோதனை மையம் திறப்பு

கரூர்

செவித்திறன் பரிசோதனை மையம்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று செவித்திறன் பரிசோதனை மையத்தை கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்தார். இந்த பரிசோதனை மையம் ரூ.31.50 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த முதல் நாளே செவித்திறன் பரிசோதனை செய்து, காது கேட்கும் திறன் குறைபாடுகளை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும் காதின் சவ்வு, நடுக்காது, உள்காது, காது நரம்பு முதலியவற்றை பரிசோதனை செய்திடவும் இயலும். மேலும் பிறவி காது கேட்கும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் பட்சத்தில் உயரிய சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

ஆட்டிசம் மையம்
இதேபோல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிசம் மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 6 வயதிற்குள் செயல்திறன் பயிற்றுனர் மூலம் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சியினை அளிப்பதன் மூலம் மற்ற குழந்தைகளை போல் இவர்களின் செயல்பாடுகளை மாற்ற முடியும்.

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடத்தைகளை சீராக்குவதற்கான பயிற்சிகள், சமூக வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 குழந்தைகள் ஆட்டிசம் மையத்தில் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வருகிறார்கள்.

நிதி ஒதுக்கீடு
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, மைலம்பட்டி, வேலாயுதம்பாளையம், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் உபகரண வசதிகளை மேம்படுத்திட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அறுவை அரங்க உபகரணங்கள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள், குருதி வங்கிக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கி வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டிட பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 50 லட்சம் நிதியும், உபகரண வசதியை மேம்படுத்திட ரூ.1 கோடியே 2 லட்சத்து 76 ஆயிரம் நிதியும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜா, மகப்பேறு தலைமை மருத்துவர் காயத்ரிதேவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




அலைப்பேசி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

 


நாமக்கல் மாவட்டத்தில் கண் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அலைபேசி (ஸ்மார்ட் போன்) பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வை குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு விலையில்லா அலைபேசிகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கு 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் தகுதி பெற்றவர்கள். பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள் (மாற்றுத்திறன் தன்மை 80 முதல் 100 சதவீதம் வரை இருத்தல் வேண்டும்). உயர்கல்வி பயில்பவர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுயத்தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளாக இருத்தல் வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அடையாள அட்டை நகல், கல்வி பயில்வதற்கான சான்றிதழ், பணிச் சான்றிதழ். சுயதொழில் புரிவதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்; கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tuesday, July 25, 2023

காது கேளாமைக்கு வைரஸ்களைக்கொண்டு சிகிச்சையளிக்க முயற்சி

வைரஸ்கள் உதவியுடன் காதுகளின் உள் ரோமங்களை செயற்பட வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

ஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமைக்கு வைரஸ் மூலம் சிகிச்சையளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சிலவகை காதுகேளாமை பிரச்சினைகளை குணப்படுத்தும் முயற்சிகளில் முன்னேற்றம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பின்னர் இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

காதுகேளாமை குறைபாடுள்ள குழந்தைகளில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மரபணுப் பிரச்சனைகளே காரணமாக இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Science Translational Medicine என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மரபுரீதியான இந்தப் பிரச்சனையை வைரஸ்களின் மூலம் சரிசெய்து, சிலவகை காது கேளாமை பிரச்சினைகளை போக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்குள் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வின் முடிவுகள் இட்டுச்செல்லக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காது கேளாமை என்பது பல காரணிகளால் உருவாகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமையை மையப்படுத்தியே இந்த குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

காதுகளில் இருக்கும் நுண்ணிய ரோமங்களே சத்தங்களை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. பிறகு இந்த சமிக்ஞைகளை மூளை புரிந்துகொள்கிறது.

அமெரிக்கா மற்றும் சுவிஸர்லாந்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ரோமங்களின் கவனம் செலுத்தி, ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆனால், மரபணுவில் உள்ள பிறழ்வுகளின் காரணமாக, இந்த ரோமங்களால் மின் சமிக்ஞையை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், காது கேளாமை ஏற்படுகிறது.

இந்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் குழுவினர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸை உருவாக்கினர். அந்த வைரஸ் ரோமங்களின் செல்களில் தொற்றிக்கொண்டு, இந்தப் பிறழ்வை சரிசெய்தது.

முழுமையாக காது கேளாதிருந்த எலிகள் மீது முதல்கட்டமாக இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த எலிகளின் காதில் ஊசி மூலம் வைரஸ் செலுத்தப்பட்டபோது, இயல்பான அளவுக்கு காது கேட்கும் திறன் வரவில்லையென்றாலும், ஓரளவுக்கு காது கேட்கும் திறன் ஏற்பட்டது.

அறுபது நாட்கள் அவற்றை ஆய்வுசெய்ததில், ஒலிகளுக்கு ஏற்ப அவற்றின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது.

"இந்த ஆய்வு முடிவு உற்சாகமளித்திருக்கிறது. ஆனால், பொய்யானதொரு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. காதுகேளாமைக்கு சிகிச்சையைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இப்போதே கூற முடியாது" என இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் உருவரும் பாஸ்டன் சிறுவர் மருத்துவமனையைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜெப்ரி ஹோல்ட் தெரிவித்தார்.

"மரபணு காரணமாக ஏற்படும் காது கேளாமைக்கு சிகிச்சையளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே இந்த ஆய்வு மிக முக்கியமானது" என்கிறார் அவர்.

ஆனால், மனிதர்களிடம் இந்த ஆய்வை நடத்த ஆய்வுக்குழுவினர் இன்னமும் தயாராகவில்லை.

வைரஸால் ஏற்படும் தாக்கம் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பது நீருபிக்கப்பட்டுவிட்டாலும், வாழ்நாள் முழுக்க நீடிக்க வேண்டிய தீர்வுதான் ஆய்வுக் குழுவின் இலக்காக இருக்கிறது.

வைரஸ் சிகிச்சையைப் பொறுத்தவரை, உள்காதில் இருக்கும் ரோமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், வெளிக்காதில் இருக்கும் செல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

இது மிக முக்கியமானது, ஏனென்றால், வெளிக்காதில் இருக்கும் ரோமங்கள் சத்தத்தின் தன்மையை மாற்றக்கூடியவை. அவைதான் மிக நுண்மையான சத்தத்தையும் கேட்க உதவுகின்றன.

டி.எம்.சி.1 என்றழைக்கப்படும் ஒரு மரபணுவின் பிறழ்வுதான் இப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரியமாகக் கடத்தப்படும் 6 சதவீத காது கேளாமைப் பிரச்சனைகளுக்கு இந்த மரபணுப் பிறழ்வு காரணமாக இருக்கிறது.

டி.எம்.சி1 என்கிற மரபணுவைத்தவிர நூற்றுக்கும் அதிகமான வேறு மரபணுக்கள் இந்த காதுகேளாமை பிரச்சனையுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன.

மேலும், மிகச் சத்தமாக இசையைக் கேட்டதால் கேட்கும் திறனை இழந்த ஒருவருக்கு இந்த ஆய்வு பலன் தராது.